நாம் பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்து அனுப்ப வேண்டியது மக்கள் சேவையாளர்களையா அல்லது மக்கள் பிரதிநிதிகளையா?
இலங்கை எதிர்கொள்ள இருக்கும் பாராளுமன்றத் தேர்தல் பற்றி சமூகத்தின் வெவ்வேறு நிலையிலும் பங்குபெறும் பலருடன் நான் அண்மையில் பேசிக் கொண்ட விடயங்களையும் சமூக ஊடகங்களில் அவதானிக்கும் தேர்தல் பற்றிய பதிவுகளிலுமிருந்து ஒரு கொள்கை ரீதியான வெறுமை வாக்காளர்களாகிய பொதுமக்கள் மத்தியில் இருப்பதைக் காண்கிறேன்.
இந்த நிலை காணப்படுவதற்கு ஒரு முக்கிய காரணம் என்னவெனில், பாராளுமன்ற உறுப்பினர்கள் என்றால் யார் என்றும், அவர்களது பிரதிநிதித்துவம் எதற்கு என்றும், நாட்டை ஆளும் ஒரு தேசிய சபையாகிய இந்த மன்றத்தில், நாட்டின் சட்டங்கள் பற்றியும் நிதி ஒதுக்கீடுகள் பற்றியும் பத்தும் பலதும் அலசி ஆராய்ந்து விவாதிக்கப்படவேண்டிய இடத்தில், நமது பிரதிநிதிகளாக நாம் தெரிவுசெய்து அனுப்பும் நபர்கள் எந்த அளவுக்கு ஒரு பங்களிப்பை வழங்கும் தன்மையும் அறிவும் திறனும் அனுபவமும் ஆளுமையும் உடையவர்களாக இருக்கவேண்டும் என்பதையும் பற்றியதான ஒரு தெளிவின்மையே ஆகும்.
நமது பிரதிநிதிகளாக நாம் வாக்களித்துத் தெரிவு செய்து பாராளுமன்றம் அனுப்புகின்றவர்கள், நமது பிரதேசத்தின் தேவைகள் மற்றும் மாவட்டத்தின் அபிவிருத்தியை தாண்டி, தேசிய ரீதியாக நாட்டின் முடிவுகள் எடுக்கப்படும்போது நமது மாவட்ட மக்களின் எண்ணங்களையும் அபிலாஷைகளையும் பாராளுமன்றில் பிரதிபலிக்கும் அர்ப்பணிப்பை உடையவர்களா என்பதை சிந்தித்து நாம் வாக்களிப்பது மிக மிக அவசியமானது.
நம் பிரதேசங்களில் இன்று காணப்படும் தேவைகளை மையமாக வைத்து, இந்த சேவையைச் செய்து தருவேன், இதை மாற்றுவேன், அதை நாட்டுவேன், இதை போடுவேன், அதை இடிப்பேன், இதை எடுப்பேன், அதை கட்டுவேன் என்றெல்லாம் உறுதியளிக்கும் சேவையாளர்களாக தம்மை முன்னிறுத்தும் வேட்பாளர்களைத் வாக்களித்து பாராளுமன்றம் அனுப்புவதை தாண்டி, தமது பிரதிநிதித்துவக் காலத்தில், அவ்வப்போது தேசிய ரீதியாக எழும் அரசியல் கேள்விகளிலும் கலந்துரையாடல்களிலும் தமது பிரதேச மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்க தங்களை அர்ப்பணிக்கத் தயார் என்று தம்மை ஒரு மக்கள் பிரதிநிதியாக முன்னிறுத்தும் வேட்பாளர்களையே இம்முறை பாராளுமன்றம் அனுப்புவதில் நாம் அக்கறை செலுத்தவேண்டும்.
கடந்த வருடங்கள், விஷேடமாக COVID -19 சர்வதேசப் பரவலும், அதைத் தொடர்ந்து நாம் இலங்கை மக்களாக எதிர்கொண்ட பற்பல இன்னல்களும் நமக்குக் கற்றுத்தந்த ஒரு பாடம் என்னவெனில், இன்று நமக்கும், நமது குடும்பங்களுக்கும், சமூகத்துக்கும், பிரதேசத்துக்கும் பெரிதான தேவை என நாம் எண்ணும் விடயங்கள் எல்லாம் ஒரு நாளில் மாற்றமடையக் கூடியவை என்பதே. பிரதேசத்தின், நாட்டின் தேவை என்பது இன்று ஒன்றாக இருக்கும், நாளை வேறொன்றாக மாறும். ஆனால், தேவை அவ்வப்போது என்னவாக மாறிடினும் தமது அரசியல் கொள்கையில் உறுதியோடு இருந்து தமது மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதை தமது தலையாய கடமையாக எண்ணி அதை உத்தமத்துடன் செய்யும் தன்மை உள்ளவர்கள் என நாம் காண்கின்றவர்களையே நாம் பாராளுமன்றம் அனுப்பவேண்டும்.
பாராளுமன்ற உறுப்பினர்களின் உயர் பொறுப்புக்கள் என்னவென்று நாம் பார்க்கும்போது, நாட்டின் சட்டம் மற்றும் நிதி பற்றி தேசியரீதியில் எடுக்கப்படும் ஒவ்வொரு தீர்மானத்திலும் தமது பிரதேச மக்களின் கருத்துக்களை பிரதிநிதித்துவப்படுத்துவது ஆகும். இந்த இரண்டுமே அவர்களின் மிகவும் முக்கிய கடமைகள். எனவே இந்த இடத்துக்கென ஞானமும் அறிவுமுள்ள, நற்குணமும் நல் நெறிமுறையும் உடைய, அனுபவமும் ஆளுமையும் நிறைந்த நற்பிரஜைகளை தெரிவுசெய்து பாராளுமன்றம் அனுப்புவது உங்களதும் என்னுடையதும் கடமையாகும். நமக்கு வீதி அமைத்துத் தருவார்களா, வீடு கட்டித் தருவார்களா, பாடசாலைக்கு கூரை போட்டுத் தருவார்களா, ஒலிபெருக்கி வாங்கித் தருவார்களா என்றெல்லாம் கேட்டு பாராளுமன்ற உறுப்பினர்களின் தரத்தைக் குறைக்காமல், தேசிய ரீதியில் விவாதித்து ஆமோதித்து எடுக்கப்படும் ஒவ்வொரு அரசியல் முடிவிலும் நமது பிரதேச மக்களது விருப்பங்களின் மற்றும் எண்ணங்களின் பிரதிநிதிகளாக இவர்கள் நிற்பார்களா என்ற கேள்வியைக் கேட்டு எமது வாக்குரிமையைப் பயன்படுத்துவது நல்லது.
2022 ஆம் ஆண்டு, இலங்கை ஜனாதிபதி தேர்தல் எவ்வாறு இடம்பெற்றது என்பது நாம் அறிந்ததே. நாடு இருந்த பொருளாதார மற்றும் அரசியல் நிலையில், நேரடி ஜனாதிபதித் தேர்தல் நடாத்தமுடியாத நிலையில், மக்கள் குரலாக நமது பிரதிநிதிகளாகிய பாராளுமன்ற உறுப்பினர்களே அத்தேர்வை வாக்குமூலம் நடப்பித்தனர் என்பது நமக்கு ஞாபகம் இருக்கட்டும். இதுபோன்றே எதிர்வரும் வருடங்களிலும், எப்படியான சூழ்நிலையிலும், நமது குரலாக ஒலிக்கக்கூடிய வேட்பாளர்களை பாராளுமன்றம் அனுப்புவோம்.
சரியான பிரதிநிதித்துவம் இருக்கும்போது நமக்கு வந்து சேரவேண்டிய சேவைகளும் சரியான தேசிய மற்றும் பிராந்திய நிர்வாகத்துக்கூடாக வந்து சேரும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை என்பதோடு, சரியான குரல்கள் சரியான இடத்திலும் சரியான தருணங்களிலும் ஒலித்தால், மக்களுக்கு கிடைக்கவேண்டிய சேவைகளும் சரியான முறையில் சரியான கட்டமைப்பினூடாக வந்து சேரும் என்பதும் உறுதி!
கல்வியிலும் பலவித துறைகளிலும் நமது பிரதேசத்தின் பிரஜைகள் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் சிறந்து விளங்கவேண்டும் என்றும் நம் பிரதேசத்துக்கு நல் மதிப்பைப் பெற்றுத்தர வேண்டும் என்பதிலும் கவனமாக இருந்து, சரியான தேர்வுகளை நடாத்தி, சரியானவர்களை அனுப்பி அழகுபார்க்கத் தெரிந்த நமக்கு, நமது நாட்டின் பாராளுமன்றத்துக்கும் சரியானவர்களை அனுப்பி தேசிய அரசியலில் அவர்களின் வகிபாகம் ஏற்படுத்தும் மாற்றத்தைப் பார்த்து ரசிப்பதில் மட்டும் என்ன குறையை வைக்கின்றோம். "அந்த மாவட்டத்திலிருந்து ஒரு MP வந்தால் அது MP தான்டா!" என்று மற்றவர் பார்த்து பெருமிதம் அடையும் அளவுக்கு நமது தேர்வுகள் அமையவேண்டும். இதுவே கற்றறிந்து உயர்நோக்குடன் செயல்பட விரும்பும் ஒரு சமூகத்தின் அடையாளமாக இருக்கும்.
Comments
Post a Comment