அண்மையில் வெளியான உயர்தரப் பரீட்சை முடிவுகளை நம்மில் பலர் பகிர்ந்துகொண்ட விதத்தை வைத்து எனது மனதில் எழுந்த கேள்விகள் சில.


அண்மையில் வெளியான உயர்தரப் பரீட்சை முடிவுகளை நம்மில் பலர் பகிர்ந்துகொண்ட விதத்தை வைத்து, விஷேடமாக தங்களது பாடசாலையின் பெறுபேறுகள் என்று சொல்லி அநேகமான ஆசிரியர்கள் மற்றும் பழைய மாணவர்கள் பகிர்ந்துகொண்ட சில பட்டியல்களை வைத்து எனது மனதில் எழுந்த கேள்விகள் சில. எனது கருத்தில் ஏதும் பிழை இருப்பின் தாராளமாக உங்கள் கருத்தையும் தெரிவிக்கவும். 

எப்போதும் பேசாமல் இருப்போம் என்று நினைப்பேன், ஆனால் இதற்கும் மேல் பொறுக்க முடியாத நிலையில் இவற்றைப் பகிர்கிறேன். ஆனாலும், இந்த "விளக்கமறியா பட்டியல்கள்" மத்தியில் சில மிகவும் விளக்கமான,  உயர்தரக் கல்வி மற்றும் பரீட்சை பற்றியதான சரியான புரிதல்களோடும், ஒரு முன்னேறி வரும் சமூகத்தின் அடையாளமான சில பட்டியல்களையும் அவதானித்தேன் என்பதையும் குறிப்பிட விரும்புகின்றேன்.  எனது கேள்விகள் சில...

1. உங்களது பிரபலமான தேசிய பாடசாலைகளில், போன வருடத்திலிருந்து வர்த்தகம், கலை, தொழினுட்பம் போன்ற பிரிவுகளை நீக்கி விட்டீர்களா? அப்படி நீக்கவில்லையானால் அந்த பிரிவுகளின் மாணவர்களின் பெறுபேறுகள் உங்களுக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லையா? 

2. பௌதிக விஞ்ஞானப் பிரிவிலும், உயிரியல் விஞ்ஞானப் பிரிவிலும் பெற்ற சிறந்த பெறுபேறுகள் மாத்திரமே  நாட்டிற்கு பிரியோசனமானதாய் உங்களுக்குத் தெரிகின்றது என்றால் பின்னர் ஏன் பாடசாலைகளிலும் பல்கலைக்கழகங்களிலும் மற்றைய துறைகளை இன்னும் வைத்து, வளர்த்து அந்த பீடங்களுக்கும் அந்த இலவசக் கல்விக்குமான உங்கள் வரிப்பணத்தை வீணே செலவு செய்கின்றீர்கள்?

3. மாணவர்களின் வெளியான பெறுபேறுகளின் பக்கங்களில் யார் என்ன துறைக்குத் தெரிவு என்று எங்காவது குறிப்பிடப்பட்டுள்ளதா? வெறுமனே ஒரு பெரும் பொய்யைத்தானே முரசடித்துச் சொல்லுகிறீர்கள்! ஒவ்வொரு பல்கலைக்கழக துறைக்குமான வெட்டுப்புள்ளி இன்னும் வெளியாகாத நிலையில் போன வருடங்களில் வந்த பெறுபேறுகளின் விளைவுகளை அடிப்படையாக வைத்தே சொல்லுகின்றீர்கள் தவிர, அந்த மாணவர்கள் இனிமேல்தான் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் தாங்கள் பெற்றுக்கொண்ட பெறுபேறுகளின் அடிப்படையில் விண்ணப்பம் அனுப்பி, அதில் நூற்றுக்கும் மேலான துறைகளை ஒவ்வொரு பல்கலைக்கழகத்தினிடமும் கேட்கவேண்டும் என்று அறிவீர்களா? நீங்கள் கொண்டாடிப் பேசும் துறைகளுக்கு அந்த மாணவன்/மாணவி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பும் விண்ணப்பப் படிவத்தில் விண்ணப்பிக்கவில்லையாயின் அவர்கள் அந்த துறைக்கு செல்லமாட்டார்கள் என்று அறிவீர்களா? 

4. சிறந்த சித்தியோடு தேசிய மற்றும் மாவட்ட மட்டத்தில் முன்னிலைகளைப் பெற்றுக்கொண்ட எல்லா மாணவர்களுமே நீங்கள் கொண்டாடும் துறைகளுக்குத்தான் செல்ல விரும்புகின்றார்கள் என்பது உங்களுக்கு நிச்சயமா? அவர்களின் உயர்தரப் பரீட்சை முடிவுகளையும் அவர்களின் rank ஐயும் வைத்து அவர்களின் எதிர்காலத்தை நீங்கள் தெரிவுசெய்துகொடுக்கின்றீர்களா? இது நீங்கள் அவர்கள் மேல் போடும் ஒரு தீர்மான சுமை அல்லவா? உதாரணமாக, பௌதிக விஞ்ஞான துறையில் சிறப்பான முதல் நிலைகளைப் பெற்ற மாணவர்கள் எல்லாருமே பொறியியல் துறைக்குத்தான் செல்லவேண்டும் என்று எங்காவது நிபந்தனை உண்டா? அவர்களில் சிலர் பல்கலைக்கழகம் சென்று பௌதிகவியல், கணிதம், புள்ளிவிபரவியல் போன்ற இன்னும் அனேக துறைகளைக் கற்று நாளை நம் சமுதாயத்தில் ஒரு பௌதிகவியல் பேராசிரியராகவோ, விஞ்ஞானியாகவோ ஆக முடியாதா? உயர்தரப் பரீட்சையில் மாவட்டத்தில் முதலிடம் பெற்ற பேராசிரியர்களும், SLAS அதிகாரிகளும் இன்னும் அனேக துறையில் நமக்கு வேண்டாமா? 

5. விஞ்ஞானத் துறைகளில் தேசிய மட்டங்களில் மிகச் சிறந்த நிலைகளைப் முன்னைய வருடங்களில்  பெற்றுக்கொண்ட சில மாணவர்கள்  மருத்துவம், பொறியியல் தவிர்ந்து வேறு துறைகளைத் தெரிவு செய்து கற்றது கேள்விப்பட்டிருக்கின்றீர்களா? 

6. எனது மனதில் எழும் ஒரு மிகப் பெரிய அவதான கேள்வி. ஒரு இரசாயனவியல் பேராசிரியராக வரவேண்டும் என்ற இலட்சியத்தோடு இருக்கும் ஒரு மாணவி/மாணவன் உயர்தரப் பரீட்சையில் 3A சித்தி பெற்று, மாவட்ட மட்டத்தில் முதலாவதாக வருவது அந்த மாணவரின் குற்றமா? இதற்காக அவர் பரீட்சையின்போது அளந்து பார்த்து "நமக்கு எந்த அளவு சரியாக இருக்கும்?" என்று நினைத்தா விடைகளை அளிப்பது? ஆகையால், பரீட்சை முடிவுகள் வந்தவுடன் பதறியடித்து "இதோ மருத்துவபீடம் செல்கிறான், பொறியியல் பீடம் செல்கிறாள்" என முரசொலிப்பது அந்த மாணவனை/மாணவியை எவ்வளவு ஒரு அழுத்தத்துக்குள்ளாக கொண்டு செல்லும் என்றும், அவர்களுடைய இலட்சியத்தில் இருந்து அவர்களை அது எவ்வளவு தூரப்படுத்தும் என்றும் அறிவோமா?

ஆகையால், என்னைப் பொறுத்தவரையில், உயர்தரப் பரீட்சை முடிவுகளை, மாணவர்கள் தங்கள் பாடசாலைக் கல்வியில் பெற்றுக்கொள்ளும் மிக உயர்வான பெறுபேறாக கொண்டாடவேண்டுமே தவிர அதை அவர்களுடைய எதிர்காலத்தின் நமது தீர்மானமாக நாம் வைக்கக்கூடாது. நாம் எல்லோரும் நிச்சயமாகவே நமது பாடசாலைகளின் பெறுபேறுகளை கொண்டாடி மாணவர்களையும் அவர்கள் பெற்றோரையும் ஆசிரியர்களையும் மெச்சிக்கொள்ளவேண்டும். அவர்களின் சிறந்த பெறுபேறுகளையும் அவர்களின் மாவட்ட, தேசிய நிலைகளையும் சொல்லி,
வர்த்தகம் (Commerce)
பௌதிக விஞ்ஞானம் (Physical Science)
கலை (Arts)
உயிரியல் விஞ்ஞானம் (Bio Science)
தொழினுட்பம் (Technology)
என்ற பிரிவுகளில் இத்தனை பேர் இத்தனை நல்ல பெறுபேறுகள் பெற்றார்கள் என்று பாராட்டி மகிழவேண்டுமே தவிர,
"இத்தனை மருத்துவம்,
இத்தனை பொறியியல்" என்று பொய் உரைக்கக் கூடாது.

பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள், முதலாவதாக, தாங்கள் பாடசாலைக் கல்வியில் பெற்றுக்கொண்ட மிக உயர்ந்த இந்த அடைவைக் கொண்டாடட்டும். அதன் பின்னர், தங்கள் இலட்சியங்களையும் விருப்பங்களையும் மனதில் வைத்து அதற்கேற்ப தங்கள் துறைத் தெரிவுகளை வரிசைப்படுத்தி தங்களது பல்கலைக்கழக விண்ணப்பங்களை கவனமாக அனுப்பட்டும். அவற்றின் பதில்கள் வந்தவுடன், நாம் எல்லோரும் மீண்டும் கூடி வந்து, இந்த இந்தப் பாடசாலையில் இருந்து இந்த இந்தத் துறைக்கு நமது சமூகத்தின் பிள்ளைகள் தெரிவுசெய்யப்பட்டு உயர் கல்விக்காக செல்லுகின்றார்கள் என்று புளகாங்கிதம் அடைவோம்.

வாழ்க கல்வி. 
வாழ்க நமது முன்னேற விரும்பும் சமுதாயம். 

நன்றி.

- எபனேசர் பிறேமன் வீரசிங்கம்

Comments

Popular Posts